Close Menu
    What's Hot

    மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!
    அரசியல்

    மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!

    Editor web2By Editor web2June 24, 2026No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    VP Sing 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜூன் 25, இந்திய அரசியல் வரலாற்றில் ‘சமூக நீதி காவலர்’ என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் (விஸ்வநாத் பிரதாப் சிங்)  பிறந்த நாளாகும். வட மாநில நிலப்பிரபுத்துவ குடும்ப பின்னணியான மாண்டா (Manda) ராஜா பகதூர் வம்சத்தில் பிறந்திருந்தாலும், தன் வாழ்நாள் முழுவதையும் எளிய மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த மகத்தான தலைவர் அவர்.

    அரசியல் லாபங்களுக்காகக் கொள்கைகளை மாற்றும் தலைவர்களுக்கு மத்தியில், கொள்கைக்காகப் பிரதமர் நாற்காலியையே தூக்கி எறிந்த வி.பி. சிங்கின் தியாகம் இந்திய வரலாற்றில் மிக அரியதொரு முன்னுதாரணமாகும்.

    போர்பர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியவர்

    1980-களின் மத்தியில் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தபோதே தன் தனித்துவமான மற்றும் சமரசமற்ற நேர்மையை வெளிப்படுத்தியவர் வி.பி. சிங் . ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருபாய் அம்பானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் மீது வரி ஏய்ப்புப் புகார்களின் கீழ் கடுமையான சோதனைகளை நடத்த உத்தரவிட்டார். சிலருக்கு இறக்குமதி வரிகளைக் குறைக்க மறுத்து, கார்ப்பரேட்டுகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

    தூய்மையான அரசை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் அதனைச் செய்ய முடியாதபோது, வி.பி. சிங் பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டார். அங்கும் அவர் ராணுவத் தளவாட பேரங்களின் பின்னணியில் இருந்த போர்பர்ஸ் பீரங்கி ஊழலை துணிச்சலுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த ஊழலில் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

    VP sing Rajiv Gandhi

    கூட்டணி ஆட்சிக்கு வித்திட்ட வி.பி. சிங்

    காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அதற்கு மாற்றாக திமுக, என்.டி. ராமாராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் உள்ளிட்ட பலதரப்பட்ட மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து 1988-ல் தேசிய முன்னணி (National Front) என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்.

    1989 நாடாளுமன்ற தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெற, இடதுசாரிகள் மற்றும் பாஜகவின் வெளி ஆதரவோடு வி.பி. சிங் இந்தியாவின் 10-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்தியாவில் இன்றைய காலம் வரை தொடரும் கூட்டணி அரசியல் கலாச்சாரத்திற்கு விதைத்தவர் வி.பி. சிங்.

    அவர் மற்ற கட்சிகள் ஆண்ட மாநில அரசுகளுக்குச் சமமான அதிகாரத்தையும் மரியாதையையும் அளித்தார். அதன் ஒரு பகுதியாக, ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்’ (Inter State Council) அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான ‘காவிரி நீர் நடுவர் மன்றத்தை’ (Cauvery Water Tribunal) அமைத்த பெருமையும் அவரையே சாரும்.

    National Front

     

    மண்டல் கமிஷனும் சமூக நீதிப் புரட்சியும்

    டெல்லியில் பிராமணீய அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் நிறைந்த மத்திய அமைச்சரவை செயலகங்களின்  அலமாரிகளில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பி.பி.மண்டல் ஆணையத்தின் அறிக்கையைக் கையில் எடுத்தார் வி.பி. சிங். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மத்திய அரசுப் பணிகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த அந்த அறிக்கையை, 1990 ஆகஸ்ட் 13 அன்று அரசாணையாக வெளியிட்டுச் செயல்படுத்தினார்.

    பாராளுமன்றத்தில் இக்கொள்கையை அறிவித்தபோது, “மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம் என்பது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் கனவுகளை நனவாக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு” என்று நெகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்தினார். பெரியாரை நேரில் பார்த்திராத போதும், அவரின் பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்தார் வி.பி. சிங். மேலும், அவரது ஆட்சிக் காலத்தில் தான் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு இந்தியாவின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    கருணாநிதியால் கொண்டாடப்பட்டவர்

    தேசிய அளவில் வி.பி. சிங்கின் சமூக நீதிப் பயணத்திற்கு மிகப்பெரிய தூணாகவும், உற்ற நண்பராகவும் விளங்கியவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி. வி.பி. சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தியபோது, தமிழ்நாடே திரண்டெழுந்து அவருக்குப் பாராட்டு விழாக்களை நடத்தியது.

    VP Sing Karunanidhi

    குறிப்பாக, சென்னையில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பாராட்டு விழாவில், வி.பி. சிங்கிற்க்கு ‘சமூக நீதி காவலர்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. “வடநாட்டிலிருந்து வந்திருக்கும் தந்தை பெரியாரின் மறுவடிவம்” என்று வி.பி. சிங்கை கருணாநிதி நெகிழ்ந்து பாராட்டினார். வி.பி. சிங் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.

    பதவியைத் துறந்த மாவீரன்

    இந்த அதிரடி முடிவு பரவலான வரவேற்பைப் பெற்றாலும், வட மாநிலங்களில் கடுமையான ‘மண்டல் எதிர்ப்புப் போராட்டங்கள்’ மற்றும் வன்முறைகள் வெடித்தன. அதே வேளையில், பாபர் மசூதி விவகாரத்தில் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையை வி.பி. சிங் அரசு பீகாரில் தடுத்து நிறுத்தி அவரைக் கைது செய்தது. இதனால் மதவாத, சாதிய ஆதரவு சக்திகள் ஒன்றிணைந்து வி.பி. சிங் அரசுக்கு எதிராக 1990 நவம்பர் 7 அன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன.

    “உங்களுக்கு எந்த மாதிரியான இந்தியா வேண்டும்?” என்று நாடாளுமன்றத்தில் தன் எதிர்ப்பாளர்களை நோக்கி கர்ஜித்த வி.பி. சிங், சமூக நீதிக் கொள்கைக்காகச் சமரசம் செய்ய மறுத்து, தன் ஆட்சி கவிழும் என்று தெரிந்தே 142–346 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று, தன் பிரதமர் பதவியை தியாகம் செய்தார்.

    அமலுக்கு வந்த 27% இட ஒதுக்கீடு

    வி.பி. சிங் அரசு கொண்டு வந்த 27% இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடரப்பட்ட புகழ்பெற்ற “இந்திரா சாவ்னி எதிர் இந்திய ஒன்றியம் (1992)” வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த இட ஒதுக்கீடு முற்றிலும் செல்லும் என உறுதி செய்தது.

    Court Hammer

    அதன்பின்னர் வந்த பி.வி. நரசிம்ம ராவ் (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில், 1993 செப்டம்பர் 8 முதல் மத்திய அரசுப் பணிகளில் இந்த 27% இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது  பிற்பாடு வந்த வாஜ்பாயின் பாஜக அரசு மற்றும் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் கூட்டணி அரசுகள் (2006-ல் உயர் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு),  இதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டன.

    லாலு பிரசாத், நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் பின்னாட்களில் அதிகார மையங்களாக உயர்ந்ததற்கு வி.பி. சிங் அன்று உருவாக்கிய சமூகப் பொறியியல் (Social Engineering) தான் அடித்தளம்.

    உண்ணாவிரத போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம்

    பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகும் அவர் மக்கள் நலப் போராட்டங்களை நிறுத்தவில்லை. 1993-ல் மும்பையில் ஏற்பட்ட மிக மோசமான மதக் கலவரங்களை நிறுத்தக் கோரி, ஒரு முன்னாள் பிரதமராகத் தனி ஆளாக உண்ணாப் போராட்டத்தில் (Hunger Strike) அமர்ந்தார். போராட்டத்தின் போது சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க, தண்ணீர் குடிப்பதை முற்றிலும் நிறுத்தினார். இந்த அதீத உண்ணாப் போராட்டத்தால் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.

    அதன்பின்னர், தாத்ரியில் (Dadri) அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த முயன்றபோது, தடைகளை மீறி நேரடியாகக் களம் இறங்கி விவசாயிகளின் பக்கம் நின்று போராடினார்.

    மறைக்கப்பட்ட நேர்மை

    VP sing

    பொது வாழ்வில் மிக உயர்ந்த நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் பேணிய வி.பி. சிங்கை அன்றைய பிராமணீய சார்பு ஊடகங்கள் எப்போதும் துரோகியாகவும், நாட்டைப் பிரிப்பவராகவும் மட்டுமே சித்தரித்தன. பிற்காலத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (NREGA) ஆகியவற்றின் சட்ட வரைவு உருவாக்கத்தின் பின்னணியிலும் ஒரு முக்கிய மூலோபாயவாதியாக வி.பி. சிங் செயல்பட்டார் என்பதை அருணா ராய் மற்றும் நிகில் டே போன்ற சமூக ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

    சாதிய மேலாதிக்கம் பேசுபவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரு சிம்மசொப்பனமாக விளங்கிய வி.பி. சிங், ஒரு தனிநபர் அல்ல; அவர் இந்திய சமூக நீதி வரலாற்றின் மாபெரும் இயக்கம் என்றால் மிகையில்லை.

    -பா. முகிலன்

    MandalCommission SocialJusticeHero OBCReservation VPSingh
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்
    Editor web2
    • Website

    Related Posts

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    June 24, 2026

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    June 24, 2026

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.