இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் திட்டத்துடன் பாஜக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில், “அரசியலமைப்பு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டு வருவதே பாஜகவின் இறுதி நோக்கம். பிரதமர் நரேந்திர மோடி என்ன சொன்னாலும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாகக் கூறியிருப்பதையும், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
தொகுதி மறுவரையறை மூலம் பெண்கள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த பாஜக விரும்புகிறது. பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் 2029 பொதுத் தேர்தலில் தற்போதைய மக்களவை இடங்களின் (543) அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
மக்களவையில் பாஜகவின் பலத்தை அதிகரிக்க எதிர்க்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரப்படுத்தி உள்ளார். இதற்குக் காரணம், கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் அவர் சந்தித்த அவமானம்தான்.
தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடியிடம் அவர் உறுதி அளித்திருந்தார். ஆனால், அவரால் மக்களவையில் 298 வாக்குகளுக்கு மேல் திரட்ட முடியவில்லை. அன்று அவர் சந்தித்த அவமானத்துக்கு பழிவாங்க அவர் முடிவு செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அதனால்தான் அவர் இப்போது கட்சிகளை உடைக்கும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் நோக்குடன் அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை உடைத்தார். இப்போது சிவசேனாவையும் உடைத்து வருகிறார். 2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசப்பட்டதை நீங்கள் இப்போது காண்கிறீர்கள். இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் செய்யவே அவர்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்று கோரினர். 400-க்கு மேல் என்ற முழக்கத்தின் பின்னணியில் இருந்த முழு நோக்கமும் அதுதான். அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில்தான் அவர் இந்த கட்சிகள் அனைத்தையும் உடைத்து வருகிறார்.
ஆனால், மக்களவையில் அவர்களுக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எதிர்காலத் தேர்தல்களிலும் அவர்களுக்கு இத்தகைய பெரும்பான்மை கிடைக்காது” என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
