இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;-
மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” –
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நகைச்சுவை, குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை மையமாகக் கொண்டு பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரையைப் பதித்த பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தனது எளிய கதையாடல், நகைச்சுவை கலந்த சமூகப் பார்வை மற்றும் குடும்ப மதிப்புகளை பிரதிபலிக்கும் படைப்புகள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம்பிடித்தவர். அவரது கலைப் பயணமும், தமிழ் சினிமாவிற்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கலைஞர்கள் மறைந்தாலும், அவர்கள் படைத்த கலை என்றும் அழியாது. பாக்கியராஜ் அவர்களின் புகழும் படைப்புகளும் தலைமுறைகளைத் தாண்டி நிலைத்திருக்கும்.”
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்;
தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கின்றது.
பாக்யராஜ், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, தாவணிக் கனவுகள், தூறல் நின்னு போச்சு உள்ளிட்ட, தனது பல்வேறு படைப்புகள் வழியாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தமிழ்த் திரையுலகில் பெற்றவர்.
அன்னாரின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அன்புத் தோழி பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், மற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விசிக எம்.பி முனைவர் ரவிக்குமார்
திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கமர்ஷியல் நோக்கத்துக்கென எடுக்கப்பட்ட தனது திரைப்படங்களின் மூலமும்கூட சில சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். மரணம் திடுமென அவரைப் பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்த் திரையுலகில் அவரது மறைவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை இட்டு நிரப்ப எவருமில்லை. அவருக்கு என் அஞ்சலி!
காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
