போர் சூழல் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை காக்க தங்க வாங்குவதை தவிர்க்குமாறு விடுத்த அழைப்பை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தனது 135-வது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு ஆசியப் போர் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைத் காக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் உள்ளிட்ட பொருள்களை ஓராண்டிற்கு வாங்க வேண்டாம் கூறியதை கூட்டிக்காட்டினார். தனது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துப் பாராட்டினார்.
தனது வேண்டுகோளை ஏற்று மக்கள் தங்கம் வாங்காமல் இருந்தது, தேசத்தின் மீதான அவர்களின் பொறுப்புணர்வை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். சிலர் தங்களது வீட்டுத் திருமண நிகழ்வுகளுக்குக் கூட தங்கம் வாங்காமல் தவிர்த்துள்ளதாகவும், சிலர் தேவைக்காகத் தங்களின் பழைய தங்கத்தை மட்டுமே மாற்றிப் புதிய தங்கம் வாங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, பலர் தங்களது வெளிநாட்டுப் பயணங்களை ஒத்தி வைத்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
தனி வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல், இயற்கை விவசாயம் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
