2026 மெக்சிகோ பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றோடு தென் கொரிய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பெரும் அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை புயல் வீசத் தொடங்கியுள்ளது. அணியின் மோசமான செயல்பாடு குறித்து அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமைப் பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ (Hong Myung-bo) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் மூலம் ஹாங் மியுங்-போ-வின் இரண்டாவது பயிற்சியாளர் காலமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னதாக 2014 பிரேசில் உலகக்கோப்பையிலும் இவரது பயிற்சியின் கீழ் களம் கண்ட தென் கொரியா, லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்த ‘குரூப் ஏ’ பிரிவில் தென் கொரியா எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தலா 1-0 என்ற கணக்கில் தென் கொரியா அடுத்தடுத்து அதிர்ச்சித் தோல்விகளைத் தழுவியது. கடைசிப் போட்டியில் செக் குடியரசை 2-1 என வீழ்த்திய போதிலும், அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ தகுதி பெற அது போதுமானதாக அமையவில்லை.
விசாரணை உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, மெக்சிகோவில் செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ தனது ராஜினாமாவை அறிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களாக நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கொரிய கால்பந்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அனைத்து முடிவுகளும் சரியாக அமைந்திருக்காது என்றாலும், என் தேசத்திற்காகவே உழைத்தேன்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் தனது எக்ஸ் பக்கத்தில் நாட்டின் கால்பந்து கூட்டமைப்பை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திறமைக்கு முன்னுரிமை தராமல், தகுதியற்றவர்களைத் தலைமைப் பதவிகளில் அமர்த்தும்போது இப்படிப்பட்ட தோல்விகள் தான் மிஞ்சும். இந்த ஏற்றுக்கொள்ள முடியாத முடிவினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்திற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டுத் துறை நிர்வாகத்தில் உடனடியாகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்று அதிபர் பதிவிட்டுள்ளார்.
பயிற்சியாளர் ஹாங் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சன் ஹியுங்-மின்-னை (Son Heung-min) தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறக்காமல் பெஞ்ச்சில் அமர வைத்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஒரு ‘டிரா’ செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில், பயிற்சியாளர் எடுத்த இந்தத் தவறான முடிவு தென் கொரியாவின் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
2002-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இணைந்து நடத்திய தென் கொரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியதே உலகக்கோப்பை வரலாற்றில் அவர்களின் சிறந்த செயல்பாடாகும். தற்போது லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
