தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ( CBSE) கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து இருந்தது.
மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மேலும், ஒரு பள்ளி 6-ம் வகுப்பில் எந்த 3-வது மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மே 15-ம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மும்மொழி திட்டத்தை கட்டாயமாக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியது. சிபிஎஸ்இ-யின் இந்த திடீர் அறிவிப்பு, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்ப்புக்கு பணிந்து, சிபிஎஸ்இ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ”தற்போது 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை. மேலும், தற்போது 7, 8, 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.
ஏற்கெனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம். அதே நேரத்தில் அவர்கள் கூடுதலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புக்கு ஏற்ற பாட புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். அவற்றில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் இருக்க வேண்டும். ஏற்கெனவே, இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியாக ஓர் இந்திய மொழியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
கூடுதல் மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு நடைமுறை மட்டுமே பின்பற்றப்படும். இவர்கள் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போது மூன்றாவது மொழிக்கு தேர்வு இருக்காது. இதேபோல், தற்போது 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இதே இடைக்கால தளர்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
