எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும், எந்த பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் என்பது தெரியாது எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவுக்கு அஞ்சல் செலுத்துவதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, சாலை மார்க்கமாக ஆண்டிமடம் சென்றார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பான கேள்விக்கு, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல எந்த பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் என்பது தெரியாது என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல எனவும் கூறினார்.
கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லாமல் த.வெ.க வினர் அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா என்கிற கேள்விக்கு, யூகமான கேள்விகளுக்கு யூகமாக பதில் சொல்ல முடியாது என்றார். தாங்கள் தவெக ஆட்சி அமைப்பதற்கு துணை இருந்தோம். இந்த ஆட்சி ஐந்தாண்டு தொடர வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம் அதில் எங்களுக்கு இந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஊசலாட்டமும் இல்லை என உறுதி தெரிவித்தார்.
மதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்ன வைகோ, அவரது மகனையும் ராஜினாமா செய்யச் சொல்வாரா என்னும் கேள்விக்கு அதற்கு வைகோதான் பதில் சொல்லவேண்டும் என்றார்.
என்எல்சி பங்குகளை விற்கும் முயற்சி கைவிட வேண்டும் என வலியுறுத்தியவர், அவ்வாறு விற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு அதை வாங்கி கொள்ள வேண்டும் என்றார்.
ஜூலை 1-இல் நடைபெறும் முதலமைச்சருடனான சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கிற ஒரு நிகழ்வாக அது இருக்கும் எனவும் அந்த நிகழ்விலே முதலமைச்சர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்..
தொடர்ந்து, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் என்னும் முறையில் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் நான் பங்கேற்கப் போவதில்லை. ஆனால் ஊடகங்கள் யூகங்களாக செய்திகளை பரப்புகிறார்கள் எனக் கூறியவர், த.வெ.கவிடம் எந்த நிர்பந்தமும் வைக்கவில்லை, திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கவில்லை ஊடகங்களே பரப்புவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அது உண்மையா இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறினார்.
