அதிமுகவில் தன்னை நம்பி வந்த நிர்வாகிகளை விட்டுவிட்டு தனக்கு மட்டும் பதவி பெறத் தயாராக இல்லை என்றும், தன்னுடன் இருந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தனக்கு மட்டும் பதவி வழங்கப்பட்டால் அதை ஏற்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சிகளை அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த 25 நாட்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் கட்சியின் உள்நிலை குறித்து தனது ஆதரவாளர்களிடம் எஸ்.பி. வேலுமணி விரிவாக விளக்கிப் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் சில நொடி வீடியோ காட்சிகளை அவரது ஆதரவாளர்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், “என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவி வாங்கத் தயாராக இல்லை. என்னுடன் 30 மாவட்டச் செயலாளர்கள் வந்தனர். அவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்து அவர்களை விட்டுவிட்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று எஸ்.பி. வேலுமணி பேசுகிறார்.
மேலும், வீரமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கட்சியின் ஜாம்பவான்கள் என்றும், அவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் ஆவேசமாக பேசியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதனுடன், எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேசும் காட்சிகளையும் அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணியிடம், கட்சிப் பதவி தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர்,
“எதுவாக இருந்தாலும் உங்களிடமே சொல்வேன். நீங்கள் தான் ‘பிளாஷ் நியூஸ்’ போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அதிமுக இருக்கக் கூடாது என்பதுபோல சில ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டு வருகின்றன. என்னிடம் கேட்க வேண்டியதை நேரடியாகக் கேளுங்கள்; எதுவாக இருந்தாலும் உங்களிடம் நான் சொல்லிவிடுவேன்,” என்று தெரிவித்தார்.
எஸ்.பி. வேலுமணி பேசியதாக வெளியாகியுள்ள இந்த வீடியோவும், அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கமும், அதிமுகவின் தற்போதைய உள்கட்சி அரசியல் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
