சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெற்ற தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில உரிமைகள், கூட்டணி ஒருங்கிணைப்பு, மதச்சார்பற்ற அரசியல் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமாவளவன் ஆச்சரியம்
கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ஆட்சி அமைக்கும்போது பாஜக ஆதரவில் இருந்த அதிமுகவை நாடாமல், மதச்சார்பற்ற கட்சிகளான IUML, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றது வரவேற்கத்தக்கது. அதனால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம். திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்படி ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி இருந்தாலும், அவர்கள் எடுத்த முடிவு என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காதர் மொய்தீன் மகிழ்ச்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ஆட்சியில் பங்குதந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கூட்டணிக்கு தனிப்பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
வைகோ சங்கடம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நான் தலைநிமிர்ந்து உட்கார முடியாத சூழலில் அமர்ந்திருக்கிறேன். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தால் அவர்களையும் அழைத்து வந்திருப்பேன். சங்கடத்துடன் அமர்ந்திருக்கிறேன்” என்று உருக்கமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ப. சிதம்பரம் பாராட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், பதிவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் லஞ்சமின்றி பணிகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, இந்த நடைமுறை தொடர வேண்டும் என்று பாராட்டியதாக கூறப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும், மாநில உரிமை தொடர்பான பிரச்சினைகளையும் ஒருங்கிணைக்க வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் நம்பிக்கை
கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜோசப் விஜய், மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், “ஆறு மாதத்தில் அரசு கவிழும்” என்று எதிர்க்கட்சிகள் கூறுவதாக குறிப்பிட்ட அவர், “அடுத்த 10 ஆண்டுகளும் நமது ஆட்சிதான். அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள்” என கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தின் முடிவில், கூட்டணி தொடர்பான விவகாரங்கள் மற்றும் மாநில உரிமை கோரிக்கைகளை அரசிடம் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்ல ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பிரதிநிதிகள் இடம்பெறும் வழிகாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. பின்னர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் விஜயை தனித்தனியாக சந்தித்து அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
