தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையிலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ்குமார் முன்னிலையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாக்கூர் எம்.பிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வது,
தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை அளிக்க அரசியல் விவகாரக் குழு எடுத்த முடிவை வரவேற்பதோடு, காங்கிரசின் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பது என தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஜூலை 15-ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை ஒரு வார காலம் கொண்டாடுவது, ‘நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்” என்ற முழக்கத்துடன் மாவட்டம் முழுமையும் ‘ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்” நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்வது,
எஸ்.எஸ்.ஏ.- 2 திட்டத்தின்படி மாவட்ட தலைமைக்கு அடுத்த நிலையில் உள்ள வட்டார, நகர, சர்க்கிள், பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளை முற்றிலும் சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்வையாளர்களை அனுப்புவது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மோசடி தொடர்பாக, பா.ஜ.க., சங்பரிவாரங்கள் மேற்கொண்ட இந்த கூட்டுக் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். இதன்படி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம். காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
