காலதாமதமின்றி தமிழகத்து வழங்கவேண்டிய காவிரிநீரை கர்நாடகா வழங்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதில், காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் தெளிவாக உள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை காலதாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள், காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா உள்ளிட்ட சாகுபடிகள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், தமிழகத்திற்குரிய நீர் உரிய நேரத்தில் கிடைக்காதது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர்,
கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் முழுமையாக மதித்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை எந்தவித தாமதமும் இன்றி திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய அரசும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீடு செய்து, தமிழகத்திற்கு உரிய நீர் பங்கினை முழுமையாகப் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்பதே தமிழக மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாகும் என கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
