தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்துவது தொடர்பாகத் தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 100 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த இரு கல்லூரிகளிலும் ஏற்கனவே இருந்த 100 இடங்கள், தற்போது 150 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த உயர்வு 2026-27ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 50 இடங்களை ஒதுக்க தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. அதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு அதிகரிப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் கூடுதல் பலனைத் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் இடங்களுக்கான அனுமதி மூலம் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,150 ஆக உயர்ந்துள்ளது.
