சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதல்வர் விஜய் மருத்துவ அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 35 புதிய மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்ததுடன், மருத்துவமனைகளுக்கான நவீன உபகரணங்களின் பயன்பாட்டையும் அவர் தொடங்கி வைத்தார்.

மருத்துவத் துறையின் புதிய இணையதளச் சேவையான ‘நலம் TN’-ஐ முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் பொதுமக்கள் வரை எவரும் இந்தத் தளம் வழியாகத் தாங்கள் விரும்பும் அரசு மருத்துவமனைக்கு வெளிப்படைத்தன்மையுடன் நன்கொடைகளை வழங்க முடியும்.

இந்த விழாவில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், திருமணம் மற்றும் பிறந்தநாள் போன்ற சுப நிகழ்வுகளைக் கொண்டாடுபவர்கள் ‘நலம் TN’ மூலம் விரும்பிய மருத்துவமனைக்கு நிதி உதவி செய்யலாம் என்று தெரிவித்தார்.
