மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு மற்றும் குடும்ப பராமரிப்பு விடுப்பில் இருந்த ஊழியர்களை செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் பணிநீக்கத்திற்கு தேர்வு செய்ததாகக் குற்றம்சாட்டி, மெட்டா நிறுவனத்தின் 26 ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த மே மாதத்தில், தனது பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா அறிவித்திருந்தது. இந்த பணிநீக்கத்திற்காக AI அமைப்புகள், விசைப்பலகை (keystroke) செயல்பாடு, ஊழியர் செயல்திறன் தரவுகள் மற்றும் அல்காரிதம் அடிப்படையிலான மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு அல்லது குடும்ப விடுப்பில் இருந்த ஊழியர்களின் செயல்திறன் இயல்பாகவே குறைவாகப் பதிவாகும் நிலையில், அந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பணிநீக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வழக்குத் தொடர்ந்துள்ள 26 பேரும் மருத்துவ காரணங்கள் அல்லது குடும்ப காரணங்களுக்காக சட்டப்பூர்வ விடுப்பு எடுத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் மகப்பேறு மற்றும் பெற்றோர் விடுப்பில் இருந்ததாகவும், சிலர் உடல்நலக் குறைபாடுகளுக்காக விடுப்பு பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா மறுத்துள்ளது. “பணியாளர் நிர்வாகம் மற்றும் நிறுவன முடிவுகள் மனிதர்களால் எடுக்கப்பட்டவை; AI மூலம் அல்ல. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், மருத்துவ விடுப்பு சட்டம், மாற்றுத்திறனாளிகள் சட்டம், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல அமெரிக்க சட்டங்களை மீறியுள்ளதாகக் கூறி, பணிநீக்கத்தை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
