ஆந்திர கடல் எல்லையில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அண்மையில் ஆந்திர அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சென்னையை சேர்ந்த 7 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டு ஆந்திராவின் ஜீவலடின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மீனவர்கள் தரப்பில் தமிழக அரசிடம் படகுகளை மீட்கவும், தொடர்ந்து ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தரவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு மீனவளத்துறை அதிகாரிகள், ஆந்திர அரசிடம் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நேரில் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர அரசின் நடவடிக்கையால் ‘ தங்கு கடல் ‘ மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள 200 தமிழக விசைப்படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள்,
ஆந்திர அரசு சிறைபிடித்துள்ள சென்னை மீனவர்களின் விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கவும்,
சென்னை மீனவர்களின் பாரம்பரிய கடற்பகுதியில் தொடர்ந்து மீன் பிடிக்கும் உரிமையை ஆந்திர அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
