மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர பாஜக அரசு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் முதலே நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, திருத்தப்பட்ட முன்மொழிவுகளை விரிவாக ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளுக்குப் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரியுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைக்கக்கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பு முறைக்கு, அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்களை 50% அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா (131-வது திருத்த மசோதா, 2026), கடந்த ஏப்ரல் 17, 2026 அன்று மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறி தோல்வியடைந்தது என்பதையும் கார்கே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கையாள வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (ஜூலை 16, 2026) நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
