நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், Cockroach Janata Party (CJP) அறிவித்துள்ள ‘சன்சத் சலோ’ (Sansad Chalo) பேரணியை முன்னிட்டு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். இதையடுத்து தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் திரண்டு வருவதால், கூடுதல் போலீசார் மற்றும் விரைவு அதிரடிப்படை (RAF) வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமலில் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்படி, அனுமதியின்றி பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவது மற்றும் ஆயுதங்களுடன் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஜந்தர் மந்தரில் நடைபெறும் சிஜேபியின் போராட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அதிஷி ஆகியோர் பங்கேற்றனர்.
CJP நிர்வாகி சௌரவ் தாஸ் கூறுகையில், “அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி நடக்கிறது. தாமதமாக வந்தாலும், நாங்கள் மனதார பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து தெளிவான பதில் வரவில்லை. முடிவு எடுப்பது அவர்களது கையில்தான் உள்ளது,” என்றார்.
முன்னதாக ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP ஆதரவாளர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். சில இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான பலப்பிரயோகம் மேற்கொண்டனர். போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க விரைவு அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
CJP நிறுவனர் அபிஜீத் திப்கே விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். NEET-UG 2026 தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
3-வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்
CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை 3-வது நாளாகத் தொடர்ந்தார். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்ட இடத்திலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகும், போராட்டம் தொடரும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சோனம் வாங்சுக் விதித்த நிபந்தனைகள்
சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ, கல்வி தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்புவதாக அரசியல் தலைவர்கள் உறுதியளித்தால் மட்டுமே சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்று தெரிவித்தார்.
மேலும், தனக்கு விருப்பமான தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் செய்துள்ளார்.
இதனிடையே, சமூக வலைதளமான X-இல் பதிவிட்ட சோனம் வாங்சுக், “கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தப் போராட்டத்தை “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்” என வர்ணித்த அவர், “வினாத்தாள் கசிவு போன்ற அநீதிகளிலிருந்தும், சட்டவிரோத தடுப்புக் காவல் போன்ற அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கான இயக்கமிது” என்றும் கூறியுள்ளார்.
