தமிழ்நாட்டில் அரசின் முக்கியமான வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் என்றால் அது டாஸ்மாக் கடைகள் தான். தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செயப்பட்டு வருகிறது. சுமார் 11 நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது. பீர் வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் ஆலைகளும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.
விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்த நிலையில், பல அதிரடி மாற்றங்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ம் தேதி நடந்த டாஸ்மாக் நிர்வாக கூட்டத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் ‘எலைட்’ கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. ‘டாஸ்மாக்’ கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் மதுவகைகளை அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்’ என்பது ‘டாஸ்மாக்’ ஊழியர்களின் கருத்தாக உள்ளது.
