கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகமாடுவதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டி உள்ளது.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கட்சி (CJP) நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, CJP அமைப்பின் போராட்டத்தை பலவீனப்படுத்தவே பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் இணைந்து இந்த நாடகத்தை ஆடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
CJP போராட்டத்தின் போது காவல்துறையினரின் தடியடியால் காயமடைந்து ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள், காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் கலைந்து செல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ராகுல் காந்தியின் இந்தப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான ஆதிஷி தனது எக்ஸ் தளத்தில், CJP மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாகப் போராடி வருகிறார்கள். ஆனால், மோடி அரசு அவர்களுடன் பேச மறுக்கிறது. அதேவேளையில் ராகுல் காந்தி பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறார். ஒரே மணி நேரத்தில் மோடி அரசு பேச்சுவார்த்தையையும் தொடங்குகிறது. என்னவொரு கூட்டு நாடகம் என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், CJP அமைப்பின் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பி பலவீனப்படுத்துவதற்காகவே, மோடி தனது இல்லத்திற்கு வெளியே ராகுல் காந்தியை அமர வைத்து தர்ணா நாடகம் ஆடுகிறார் என குற்றம்சாட்டி உள்ளார்.
