தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வயது குழந்தைக்கு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மூன்று முட்டைகளில் ஒன்றை பெற்றோர் உடைத்துப் பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் அழுகிய கோழிக்குஞ்சு இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது அங்கன்வாடி ஊழியர் அலட்சியமாக பதிலளித்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர் கூறுகையில்,”பெற்றோரிடம் வழங்கப்பட்ட முட்டைகளில் ஒன்றில் கோழிக்குஞ்சு இருந்ததாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
