நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், கல்வித் துறைச் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் மும்பையின் தாதர், சிவாஜி பார்க் மற்றும் சைத்யபூமி பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு, மும்பை காவல்துறை அதிகாலை வேளையில் வாட்ஸ்அப் மூலம் சம்மன் நோட்டீஸ் அனுப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிவசேனா (UBT), என்சிபி (SP), மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினருடன் இணைந்து மாணவர்கள் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறை அனுமதி பெறாமல் கூடியதாகக் கூறி சுமார் 900 பேர் மீது 7 எஃப்.ஐ.ஆர்-களை மும்பை காவல்துறை பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணி முதலே போராட்டக்காரர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. புதிய பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் பிரிவு 35(3)-ன் கீழ் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாகக் கைது செய்வதற்குப் பதிலாக, விசாரணை அதிகாரி முன் ஆஜராக உத்தரவிட இந்தச் சட்டப்பிரிவு வகை செய்கிறது.

“ஜனநாயக ரீதியாகப் போராடிய மாணவர்களை மிரட்டி, அவர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே நள்ளிரவிலும் அதிகாலையிலும் இதுபோன்ற நோட்டீஸ்களை காவல்துறை அனுப்பி பயமுறுத்துகிறது” என அனைத்திந்திய மாணவர்கள் பெருமன்றம் (AISF) மற்றும் ‘மும்பை எகெய்ன்ஸ்ட் சப்ரெஷன் ஆஃப் ஸ்டூடண்ட்ஸ்’ (MASS) கூட்டமைப்பு ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளன.
