செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் கலக்கி வருகிறது.
2022-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் இரண்டாம் பாகம், திரையரங்குகளில் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவெடுத்துள்ள இத்திரைப்படம், உலகளவில் ரூ.55 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதன் மூலம், விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே மிக அதிக வசூல் செய்த திரைப்படமான ‘ராட்சசன்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது கரியரிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ‘கட்டா குஸ்தி 2’ பெற்றுள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வார இறுதி மட்டுமின்றி வார நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதால், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
