மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் ஆறு மக்களவை உறுப்பினர்கள் இணைந்த சம்பவம் பெரும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த இணைப்பை அங்கீகரித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரே அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பவுசாஹேப் வக்செளரே ஆகிய ஆறு எம்பிக்களும் ஷிண்டே அணியில் இணைந்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மக்களவை பலம் 3 உறுப்பினர்களாகக் குறைந்துவிட்டது. மறுபுறம், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாற்றத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக சிவசேனா மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.
இணைப்பு குறித்து பேசிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இந்த ஆறு எம்பிக்களும் தங்கள் தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே எனது கட்சியில் இணைந்துள்ளனர். தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல” என்று விளக்கமளித்தார். இந்நிலையில், சபாநாயகரின் அங்கீகாரத்துக்கு எதிராக உத்தவ் தாக்கரே அணியின் சார்பில் எம்பி அரவிந்த கண்பத் சாவந்த் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை செயலாளர் மற்றும் ஆறு எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இருப்பினும், சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா கட்சியின் உள் மோதல் நீண்டகாலமாகத் தொடரும் நிலையில், இந்த இணைப்பு மற்றும் நீதிமன்றத் தலையீடு ஆகியவை எதிர்கால அரசியல் சமன்பாடுகளை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
