தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் இருந்த 29 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்ததாக உறவினர்களும் நண்பர்களும் குற்றம் சாட்டி, மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த அருணாச்சலம், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜனின் மகன். லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின்போது தனது நண்பர்களை சந்தித்த அருணாச்சலம், மூன்று போலீசார் தன்னை தாக்கியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் சம்பவம் பரவலாக அறியப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உயிரிழப்பால் உறவினர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர்.
“போலீசார் தாக்கியதாலேயே அருணாச்சலம் இறந்தார்” எனக் குற்றம்சாட்டிய அவர்கள், மருத்துவமனை முன்பு திரண்டு, குற்றமிழைத்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். “நடவடிக்கை எடுக்கப்படும் வரை உடலை வாங்க மாட்டோம்” என அறிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 17-ம் தேதி பதிவான வீடியோவில், அருணாச்சலம் சிறைக்கம்பிகளைப் பிடித்தபடி நிற்க முடியாமல் தள்ளாடிய நிலையில் திடீரென மயங்கி விழும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. கம்பிகளைப் பற்றியபடி கால்கள் மடங்கிய நிலையில் விழுந்த அவரைப் பார்த்து போலீசார் உள்ளே ஓடி வரும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கவனம் செலுத்தியுள்ளனர். போலீஸ் நடவடிக்கை மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
