டெல்லியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இணைய சேவை முடக்கங்களுக்கு இடையே, இணைய சேவை இல்லாமல் செயல்படும் தகவல் பரிமாற்ற செயலியான ‘பிட்சாட்’-க்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘பிட்சாட்’ என்பது ட்விட்டர் (தற்போது X) இணை நிறுவனர் ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்ட, இணையம் மற்றும் வை-பை வசதி இல்லாமலேயே இயங்கக்கூடிய ஒரு செயலியாகும். இது ‘புளூடூத் மெஷ்’ (Bluetooth mesh) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அருகிலுள்ள செல்போன்களுக்கு இடையே நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
இந்தநிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது, அரசு அடிக்கடி இணைய சேவையைத் துண்டித்ததால், போராட்டக்காரர்கள் இந்த பிட்சாட் செயலியைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’, இந்தச் செயலியைத் தங்கள் வலைதளத்தில் ஹோஸ்ட் செய்திருந்த ‘கிட்ஹப்’ நிறுவனத்திற்கு, அதற்கான 3 ரெபாசிட்டரிகளை உடனடியாக முடக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செயலி சட்டவிரோதமாகக் கூடுவதற்கும், அரசின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்கும், வதந்திகளைப் பரப்புவதற்கும் பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் அரசுக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
