சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) சார்பில் இளையோருக்கான ‘ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சப்-ஜூனியர் சிறுவர் பிரிவின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் போது மைதானத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. ஹாக்கி 5s விதிமுறைப்படி ஒரு அணிக்கு 5 வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற நிலையில், பாகிஸ்தான் அணி விதியை மீறி 6 வீரர்களுடன் விளையாடியது. இதனை உடனடியாகக் கண்டறிந்த நடுவர்கள் போட்டியை இடைநிறுத்தி பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தனர்.
விதிமீறலுக்காகப் பாகிஸ்தான் அணியின் 2 வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் பாகிஸ்தான் அணி வெறும் 3 வீரர்களுடன் மட்டும் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்திய வீரர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும் தாக்குதல் ஆட்டமும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதேவேளையில், சப்-ஜூனியர் சிறுமியர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய அணி, சீன அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய சிறுமியர் அணி 3-6 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியைத் தழுவியது.
