இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளது. இந்தத் தொடருக்குச் ஷுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி, ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கும் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 23-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் தொடங்கவுள்ளன. இந்தநிலையில் இலங்கை பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (வி.கீ), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணித் தேர்வில் யாருமே எதிர்பார்க்காத வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் (Saransh Jain) முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
2014-15 முதல் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர், சமீபத்தில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட முடியாது என்பதால், ஆஃப்-ஸ்பின் மற்றும் பேட்டிங் செய்யும் திறன் கொண்ட சரன்ஷ் ஜெயினுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காயத்தில் இருந்து மீண்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பிசிசிஐ உடற்தகுதிச் சான்றிதழைப் பொறுத்தே இவர்கள் விளையாடுவது உறுதி செய்யப்படும். இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர் மற்றும் சரன்ஷ் ஜெயின் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
