திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வெறும் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு விற்பனை செய்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் இன்று அதிகாலையில் மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1888ஆம் ஆண்டு பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியக்காரர் என்பவர், மடம் கட்டவும் இந்து மதக் கோட்பாடுகளைப் பரப்பவும் என தர்மசாசனமாக இந்த நிலத்தை வழங்கியிருந்தார். அதில் விற்பனை செய்யவோ, திருப்பணிகளைத் தவிர வேறு பயன்பாட்டிற்கு உபயோகிக்கவோ கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிமன்றங்களும் இது கோயில் நிலம் என்றும் வணிகப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டிருந்தன. 2025 செப்டம்பரில் கோயில் நிர்வாகம் இந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றியிருந்தது.
இருந்தபோதிலும், கடந்த ஜூலை 6ஆம் தேதி திண்டுக்கல் பதிவாளர் விடுப்பில் இருந்தபோது, கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஒருநாள் பொறுப்பேற்று, முருகதாஸ் சுவாமிகள் என்பவர் மடத்துக்காரர் எனக் கூறி வெள்ளதுரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப் பதிவு செய்தார். கோயில் நிலமா எனச் சரிபார்க்காமல் பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை அந்தப் பத்திரத்தை ரத்து செய்தது.
தவெக கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தையடுத்து தமிழக அரசு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமின் பெற்று, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், சிபிசிஐடி அதிகாலை நடவடிக்கையில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், பழனி டி.கே.என் புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
