திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கயல்விழி என்ற திருநங்கையும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி திருச்செங்கோடு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தங்களது வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தி வந்த இவர்களைப் பிரிக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குச் சென்ற பிரவீன்ராஜை, அவரது பெற்றோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் பலவந்தமாகச் சேர்த்து அடைத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு பல்வேறு சிரமங்களைச் சந்தித்த அவர், கடந்த மே மாதம் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
இதற்கிடையில் பிரவீன்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முயன்றதை அறிந்த கயல்விழி, உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, கோபிசெட்டிபாளையம் மனித சட்ட உதவி மையத்தை அணுகினர். அங்கு சட்ட மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் அனைத்துத் தடைகளையும் தாண்டி இருவரும் சுயமரியாதை முறையில் மீண்டும் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
