கோடியக்கரை அருகே நடுக்கடலில் படகு பழுதாகி 2 நாட்களாக தத்தளித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை நாகை மீன்வளத் துறையினர் பத்திரமாக மீட்டு நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது நாட்டுப் படகில், கடந்த 27-ஆம் தேதி டிப்ரியூ, ராஜ், கிரீன்சன் ஜான்சன் கென்னடி, மைக்கேல், ரூபன் ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 29-ஆம் தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக படகின் இன்ஜின் பழுதானதால், அவர்கள் 2 நாட்களாக கடலிலேயே தத்தளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ‘சுந்தரவல்லி’ என்ற விசைப்படகு மூலம் நாகை மீன்வளத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து செயல்பட்ட மீன்வளத் துறையினர், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது விசைப்படகில் சென்று மீனவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி, அவர்களையும் பழுதான படகையும் பத்திரமாக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
