நாகையில் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 36 வார்டுகளைச் சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கைகளில் காலி குடங்களுடன் கூட்டரங்கிற்குள் திரண்டு வந்தனர். லாரிகள் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், பழுதடைந்த குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
