பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் உதயநிதி ஸ்டாலினின் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள் பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்,
கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழியாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது. தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசப்படும் எந்தவொரு வார்த்தையும் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே அவமதிப்பதாகும்.
பெண்களை மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்களின் மனதை மதிக்கவும் தெரியாது என்பதை இத்தகைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன எனக் கடிந்துரைத்துள்ள அமைச்சர் கீர்த்தனா,
பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் மொழிக்கு தமிழ்நாட்டின் பெண்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி அவர்களின் இந்த ஆபாசப் பேச்சுக்கு தனது வன்மையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா,
பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் தலைவரின் கடமையாகும்; அந்தப் பொறுப்பை மீறும் எந்தப் பேச்சும் மக்கள் மன்றத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே எனக் கூறியுள்ளார்.
