திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர், கலசப்பாக்கம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து துறைகளின் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தென்மாதிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் கற்றல் திறன், வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து பள்ளியின் சத்துணவுக் கூடத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை, சுகாதார நிலை மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சத்துணவு சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், “மழைநீரில் நனைந்த இந்த அரிசியை மாணவர்களுக்கு வழங்குவீர்களா? இதுபோன்ற அரிசியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பீர்களா?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இது இன்றோ, நேற்றோ நடக்கவில்லை பல நாட்களாக நடந்துள்ளது என்றும் கடிந்து கொண்டார்.
மேலும், மாணவர்களின் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும், இதுபோன்ற தவறுகள் இனி எந்த சூழ்நிலையிலும் நடைபெறாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளை கண்டித்து அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் கடுமையான எச்சரிக்கை, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
