உத்தரப் பிரதேசத்தில், தந்தைக்கு பதிலாக உயிருடன் இருந்த மகனுக்கே மரணச் சான்றிதழ் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டம் ரன்னவுட் நகராட்சி 14-வது வார்டைச் சேர்ந்த கில்டா ஆதிவாசி என்பவரின் தந்தை ஜிக்னா ஆதிவாசி, கடந்த 2022 அக்டோபர் 24 அன்று உயிரிழந்தார்.
இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணச் சான்றிதழ் பெற கில்டா நகராட்சியில் விண்ணப்பித்தார். ஆனால், படிப்பறிவு இல்லாததால் வழங்கப்பட்ட சான்றிதழை அவர் சரிபார்க்கவில்லை.
பின்னர், தனது தந்தையின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்காக வருவாய்த் துறையை அணுகியபோது, தந்தைக்கு பதிலாக கில்டா ஆதிவாசியே இறந்ததாக மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
நகராட்சியின் இந்த அலட்சியப் பதிவுப் பிழையால், ஆதார் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தரவுத்தளங்களில் கில்டா “இறந்தவர்” என பதிவு செய்யப்பட்டார். இதனால் அவரது ரேசன் அட்டை செயலிழந்ததோடு, அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டன. பரம்பரைச் சொத்து பெயர் மாற்றமும் முடங்கியது.
இதன்காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில், “நான் உயிருடன் இருக்கிறேன்; ஆனால் என்னை உயிரோடு கொன்றுவிட்டார்கள்” மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கில்டா தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தரவு பதிவில் தவறு நடந்திருந்தால், அது உடனடியாகத் திருத்தப்பட்டு, அவருக்கான அனைத்து அரசு சேவைகளும் மீண்டும் வழங்கப்படும்” என்று ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் அர்பித் வர்மா உறுதியளித்தார்.
