தமிழகத்தின் நலன்களை விட தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் முதல்வர் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ள நிலையில் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம்.
ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும் அரசியலுக்கு அடுத்த இடமும் அளிப்பவர்கள், தமிழக முதல்வர் அவர்கள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள்.
இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல.
இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் சார்ந்தது.
தமிழக மக்கள் அனைத்தையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்; இக்கட்டான சூழலில் தமிழகத்துடன் உறுதியாக நின்றது யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
