கோடை விடுமுறை வந்துவிட்டால், குழந்தைகள் முழுநாளும் வீட்டிலேயே இருப்பார்கள். அப்போது “என்ன சாப்பிடலாம்?” என்ற கேள்வி ஒவ்வொரு மணிதோறும் கேட்டுக்கொண்டே இருப்பர்கள். அப்படிப்பட்ட நேரத்தில், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் ஸ்நாக்ஸ் தயாரித்து கொடுத்தால், குழந்தைகளும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.
அது மட்டுமல்ல – உங்கள் பிள்ளைகள் இனிப்பு பிரியர்களாக இருந்தால், ஸ்வீட் கேட்கும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்! அதிலும், ரசகுலா பிடிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், ரவை மற்றும் பாலை மட்டும் கொண்டு அதே ரசகுலா சுவையை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒருமுறை செய்து கொடுத்தாலே, “அம்மா, இன்னும் ரசகுலா பண்ணு!” என்றே கேட்கவைத்துவிடும் இந்த ரவா ரசகுலா ரெசிபியை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை கலவைக்காக:
நெய் – 1 டீஸ்பூன்
ரவை – 1/4 கப் (சுமார் 50 கிராம்)
காய்ச்சி ஆறிய கெட்டிப் பால் – 2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
உள்ளே நிரப்புவதற்கான தேங்காய் பூரணம்:
நெய் – 1 டீஸ்பூன்
அரைத்த தேங்காய் – 1 பெரிய மூடி
பொடித்த வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
நறுக்கிய பாதாம் – 5
நறுக்கிய முந்திரி – 5
சர்க்கரை பாகு:
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 2 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
செய்வது எப்படி?
ரவை கலவையை தயார் செய்தல்:
ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
அதில் காய்ச்சி ஆறிய பாலை சேர்த்து கிளறி, ரவை நன்கு வெந்து கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
கலவை ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் மூடிப் போடவும்.
தேங்காய் பூரணம்:
மற்றொரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, அரைத்த தேங்காயை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
பின்னர் பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில் நறுக்கிய பாதாம், முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
சர்க்கரை பாகு தயாரித்தல்:
ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை, 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைய விடவும்.
பாகு ஓரளவு சுண்ணமாகி வந்ததும், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
உருண்டைகள் உருவாக்குதல்:
தேங்காய் பூரணத்தை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பாலை சேர்த்து வேக வைத்த ரவை கலவையை கைகளால் மென்மையாக பிசைந்து, சிறிதளவு எடுத்து தட்டையாகச் செய்து, நடுவில் தேங்காய் உருண்டையை வைத்து மூடி உருட்டவும்.
பாகுவில் ஊறவைத்தல்:
உருட்டிய உருண்டைகளை வெப்பமான சர்க்கரை பாகுவில் போட்டு, குறைந்தது 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பரிமாறவும்.
சிறந்த ருசி:
இப்படி சுமார் 15–20 நிமிடங்களில் செய்யக்கூடிய ரவா ரசகுலா, உங்கள் பிள்ளைகளின் விருப்ப உணவாக மாறும். மற்ற சுவையான ஸ்வீட்களுக்கு மாற்றாகவும், சின்னச் சின்ன சமயங்களில் செய்யும் ஸ்நாக்ஸாகவும் இது நிச்சயமாக சிறந்த தேர்வாக இருக்கும்.