மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் காரணமாக கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன்கள் ஏவப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றது. இதனால், சில நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கனிமொழி கருணாநிதி எம்.பி சென்ற விமானம் தரை இறங்க முடியாமல், வானில் வட்டமடித்து. பின்னர், நீண்ட நேரத்திற்குப் பின் பத்திரமாக தரை இறங்கியது.
அதனைத் தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பி-க்கள் குழு மாஸ்கோவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அடைந்தனர்.
இந்த குழு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று மாஸ்கோவில் ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.