கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பழங்கள் இன்றியமையாதவை. குறிப்பாக, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி (வாட்டர்மெலான்), முலாம்பழம் (மஸ்க்மெலான்), நன்னாரி சர்பத், மற்றும் நுங்கு ஆகியவை கோடையின் வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலைக் காத்து, உணவுத் தேடலை நிறைவு செய்ய இந்த இயற்கையான இனிப்புப் பழங்கள் பக்கபலமாக அமையும்.
முலாம்பழம்: கோடைகாலத்தின் பொக்கிஷம்
முலாம்பழங்களில் நீர்ச்சத்து அதிகம். வெளிப்புறத்தில் தடிமனான ஓடு இருந்தாலும், உள்ளே ஆரஞ்சு நிறக் கூழ் போன்ற சதைப்பற்று நிறைந்த பழம் கிடைக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. சாலையோரக் கடைகளிலும் கூட நியாயமான விலையில் கிடைப்பதால், சாமானியர்களும் வாங்கிச் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
தரமான முலாம்பழம் வாங்குவதற்கான எளிய வழிகள்
ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தே அவை கனிந்துள்ளனவா அல்லது அழுகத் தொடங்கியுள்ளனவா என்று கணித்துவிடலாம். ஆனால், முலாம்பழத்தின் வெளிப்புறத்தில் மஞ்சள் நிற ஓடு மட்டுமே இருப்பதால், உள்ளே எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது சற்று கடினம். தரமான முலாம்பழத்தை வாங்குவதற்கு உதவும் சில பயனுள்ள குறிப்புகள் இங்கே:
நிறத்தை சரிபார்க்கவும்: முலாம்பழம் வாங்கும்போது அதன் நிறம்தான் முக்கியம். பழுக்காத காய் என்றால் அதன் ஓடுகளில் பச்சை நிறம் தென்படும். நன்கு பழுத்த பழம் என்றால் கீரிம் போன்ற மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
தண்டைப் பார்க்கவும்: நல்ல பழுத்த பழத்தில் தண்டு தானாகப் பிரிந்து விழுந்துவிடும். அப்படியே தண்டு இருந்தாலும், அதன் நுனிப்பகுதி உருண்டையாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
நுகர்ந்து பார்க்கலாம்: ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனிப்பட்ட வாசம் உண்டு. முலாம்பழத்தின் உள்ளே எந்த அளவுக்குக் கனிந்து, இனிப்பாக இருக்கப் போகிறது என்பதை அதன் வாசத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பழத்தின் அடிப்பகுதியை நுகர்ந்து பார்த்தால் இது தெரியவரும்.
தட்டிப் பார்க்கவும்: ஓடு போன்ற அமைப்பைக் கொண்ட முலாம்பழத்தைத் தட்டிப் பார்த்து வாங்கலாம். நீங்கள் விரல் வைத்துச் சுண்டும்போது மென்மையான ஒலி எழுந்தால் பழம் நன்றாகப் பழுத்துள்ளது என்று பொருள். கனமான ஒலி எழுந்தால் இன்னும் காயாகவே இருக்கிறது என்று அர்த்தம்.
எடையைப் பாருங்கள்: கனிந்த முலாம்பழத்தின் உள்ளே இருக்கும் கூழ் பகுதி இலகுவான எடையைக் கொண்டிருக்கும். அதுவே காய் என்றால் மிகவும் கனமானதாக இருக்கும். எனவே, பழத்தை எடுக்கும்போதே அதன் எடையை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
இந்தக் கோடையில் இந்தப் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு, புத்துணர்ச்சியுடன் இருங்கள்!