கர்நாடகாவில் சமீபகாலமாக கன்னட மொழி பேச மறுத்து இந்தியில் தான் பேசுவோம் என்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் இது..
கர்நாடக தலைநகர் பெங்களூரின் பெல்லந்தூர் பகுதியில் ஆட்டோ ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும் போக்குவரத்து நெரிசலின் போது உரசிக் கொண்டன. இதையடுத்து பைக்கில் வந்த அந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் சகட்டு மேனிக்கு அர்ச்சித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண்தான் போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் வந்து ஆட்டோ மீது மோதியதாக அந்த ஓட்டுநர் எடுத்துக் கூறியும் கேளாமல் அவர் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனை ஆட்டோ ஓட்டுநர் தனது மொபைல் போனில் படம்பிடிக்க, ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பைக் கழட்டி அவரை சரமாரியாக தாக்கினார். இதுவும் அந்த மொபைல் காட்சியில் பதிவானது. கன்னடத்தில் இவர் பதில் கூற, அந்த பெண் இந்தியிலேயே திட்டிக் கொண்டும், செருப்பால் அடித்துக் கொண்டும் இருந்தார். இதனை ஆட்டோவில் இருந்த பயணிகள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது வைரலாக பரவியது.
இதுபற்றி காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் புகாரளித்தார். வீடியோ காட்சிகள் அடிப்படையில் அந்த வடமாநில பெண் மீது தான் தவறு என்று போலீசார் உறுதி செய்தனர். இதுதொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அப்போது ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து அந்த பெண்ணும், அவரது கணவரும் மன்னிப்புக் கோரினர். இந்த காட்சிகளும் வைரலாகின.
பெங்களூரில் கன்னடர்களை வடமாநிலத்தவர் தரம்தாழ்ந்து நடத்துவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமீபமாக அதிகரித்துள்ளது. மொழி விவகாரத்தில் தமிழர்களைப் போன்று கொள்கைப்பிடிப்புடன் இருக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் தற்போது மேற்கோள் காட்டி வருகின்றன.