நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்களை பறைசாற்றும் வண்ண ரிப்பன்கள், வாண வேடிக்கைகள் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.. சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது தான் மூல காரணமாக இருந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது இந்த திருவிழா வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.

இந்த திருவிழாவில் வருடா வருடம் சாதிரீதியான வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வதும், பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என முழக்கமிடுவதும் ஒருசிலரை ஒழிக என்று கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதிரீதியான டி சர்ட்டுகளை அணிவதும், சாதிரீதியான ரிப்பன்கள் அணிவதும் தொடர்கதையாகி உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது.

எனவே சாதிமோதல்களை உருவாக்கும் இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம்,நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில். ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version