திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.

திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கை 7-7-2025 அன்று காலை 06 மணி முதல் காலை 6.47 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஆனால், இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும் போது கோவில் விதாயகரிடம், எழுத்து பூர்வமாக விளக்கம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.

குடமுழுக்கு நேரம் மாற்றப்படாததை தொடர்ந்து, ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கூறி நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்த நீதிபதிகள், குடமுழுக்கு நேரம் கடந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் இவ்வாண்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை உள்ளது? என வினவினர். அதற்கு மனுதாரர் தரப்பில் கடந்த ஆண்டு விதாயகர் நேரம் குறித்து கொடுத்தார். ஆனால் இந்த ஆண்டு உயர்நீதிமன்றம் அமைத்த குழு தான் நேரத்தை தீர்மானம் செய்தது. அந்தக் குழுவே சட்ட விரோதமானது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விதாயகரிடம் நேரம் குறித்து கொடுக்கக் கூறாமல் குழுவே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே குடமுழுக்கை நண்பகல் நல்ல நேரத்தில் நடத்த வேண்டும் என கூறுகிறோம் என தெரிவித்தார்

மேலும், இந்த வழக்கை நாளையே அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version