கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்க 10 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடித்திருக்க நம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.
நம்முடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல வீட்டிலும் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். நாம் வசிக்கும் வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் அதிகம் இருந்தால் அந்த வீடு போர்க்களமாகவே இருக்கும்.
இல்லத்தரசிகள் அதிகம் இருக்கும் இடம் சமையல்அறைதான். அந்த அறை பொதுவாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் வடமேற்கில் வைத்திருப்பார்கள் பரவாயில்லை. ஆனால் தவறியும் கூட ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் படுக்கை அறையை வைத்து விடக்கூடாது.
மிகப்பெரிய வீடு கட்டி படுக்கை அறையில் அலங்காரங்கள் செய்து வைத்து பஞ்சு மெத்தையில் படுத்தாலும் சிலருக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது காரணம் ஓயாத சண்டை சச்சரவுதான். கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டையால் ஏன்தான் வீட்டிற்கு போகிறோமோ என்று பலரும் விரக்தியடைவார்கள்.
படுக்கை அறையில் வாஸ்து குறைபாடு இருந்தாலே சண்டை வரும். அதை எப்படி சரி செய்தாலே சண்டை நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் வாஸ்து தோஷங்கள் இருந்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படாது. வாஸ்து குறைபாட்டினை நீக்குவதற்கு பெங் சூயி கூறியுள்ள பரிகாரங்களைப் பார்க்கலாம்.
படுக்கை அறையில் உள் அலங்காரம் செய்யும் போது சிறிய சாண்ட்லியர் விளக்குகளை தொங்க விடலாம். படுக்கை அறையில் ரொமான்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஓவியங்களை மாட்டி வைக்கலாம் மயில் இறகினால் செய்த விசிறியை மாட்டி வைக்கலாம். அழகான மலர் கொத்துக்களை கொண்ட பூ ஜாடிகளை படுக்கை அறை மேஜையில் வைக்கலாம்.
கடலில் கிடைக்கும் சங்குகள், கற்கள், கிரிஸ்டல்கள் குவார்ட்ஸ் கற்கள் வாங்கி அதனை படுக்கையின் கீழே சேகரித்து வைக்கலாம். கண்ணாடி உருண்டைகளை பேப்பர் வெயிட் போல தென்மேற்கு மூலையில் பயன்படுத்தலாம். படுக்கை அறை ஜன்னல் அருகில் சின்னச் சின்ன கண்ணாடி பந்துகளை மாட்டி வைக்கலாம். அதில் மாலை நேர சூரிய ஒளி பட்டு இந்த படுக்கை அறையில் பல வண்ணங்களை சிதறடிக்கும்.
படுக்கை அறையில் எந்த காரணம் கொண்டும் மிருகங்கள், கொடூர விலங்குகளின் படங்களை மாட்டி வைக்கக் கூடாது. வீட்டின் மத்தியில் சாண்ட்லியர் மாட்டி தொங்க விட்டாலும் தம்பதியர் இடையே மன ஒற்றுமையும் கருத்து ஒற்றுமையும் ஏற்படும்.
தென்மேற்கு மூலை யில் வாஸ்து தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றலாம். கடல் நீர், கோவில்களில் தரப்படும் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து வீட்டில், படுக்கை அறையில் தெளிக்கலாம்.
நிலைவாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து இரண்டு புறமும் எலுமிச்சையில் குங்குமம் பூசி வாசற்படியில் வைக்கலாம். தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் கூறி வாஸ்து பகவானை வணங்கினால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.