இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது. காலை எழுந்து முதன் முதலில் நாம் காணுவது செல்போனாக தான் இருக்கும். அதேப் போல் இரவு தூங்கும் முன்பு கடைசியாக பார்ப்பதும் செல்போனாக தான் இருக்கும். அப்படியிருக்க ஒருநாள் செல்போனோ அல்லது நெட்வொர்க்கோ இல்லை என்றால் அன்றைய தினம் அனைவருக்கும் பித்து பிடித்தாற் போல் ஆகிவிடும். அப்படியிருக்க, நடிகை சமந்தா 3 நாட்கள் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு இருந்துள்ளாராம்.
இது குறித்து அவர் பகிர்ந்த கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “என் கையில் எப்போதும் வைத்திருக்கும் செல்போன் குறித்து எனக்கு ‘திடீர்’ சிந்தனை எழுந்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.
என்னுடைய ஈகோவின் பெரும்பகுதி என் செல்போனுடன் தான் இணைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நான் யார், நான் எவ்வளவு முக்கியமானவன், நான் என்ன சாதித்தேன்? என்பதை செல்போன் தான் சொல்கிறது. அது இல்லாதபோது, நான் ஒரு சாதாரண உயிரினம் என்ற எண்ணமே வந்தது. பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன்கள் நம்மை செயற்கையான விஷயங்களில் மூழ்கடித்து விடுகின்றன. நமது முன்னேற்றத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் செல்போன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
