உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். காமெடி காட்சிகளில் பிரபலமான இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதை குறைத்து கொண்டார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் நேற்று மாலை ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த ரோபோ சங்கர் ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version