’கூலி’ படத்தின் மீதான விமர்சனங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.

பா.இரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’ அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி, லோகேஷ் கனகராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்வு முடிந்து கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

அதில், “’கூலி’ முடிந்தவுடன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை. ஏனென்றால் அடுத்த படத்தின் வேலைகளில் இருந்தேன். எனக்குமே மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு ஒரு சரியான மேடை கிடைக்கவில்லை. ’கூலி’ படத்தின் மீது 1000 விமர்சனங்கள் இருந்தது. மக்களுக்கு படங்களை கொடுக்கும் போது, அதற்கு வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

நானும் அந்த விமர்சனங்களை எடுத்துக் கொண்டு, அடுத்த படத்தில் அதனை தவிர்ப்பதற்கான பணிகளில் தான் ஈடுபடப் போகிறேன். அனைத்து விமர்சனங்களையும் கடந்து ரஜினி சாருக்காக மக்கள் திரையரங்கில் போய் படத்தைப் பார்த்தார்கள். தயாரிப்பாளரிடம் கேட்டபோது அப்படம் ரூ.500 கோடி வசூல் செய்ததாக தெரிவித்தார்.

அதற்குக் காரணமான மக்களுக்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. எனது அடுத்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version