பிரபல நடிகை நோரா பதேஹி கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடும் போதையில் கார் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன?
ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்தபோதும், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் “மனோஹரி” பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனது தனித்துவமான கவர்ச்சி நடனத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது கார் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மும்பையில் பிரபல அமெரிக்க டிஜே டேவிட் குட்டாவின் ‘சன்பர்ன்’ இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரோடில், நோரா தனது காரில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த போதை நபர் ஒருவர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் நோரா, காருக்குள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை காரின் ஜன்னல் கண்ணாடியில் பலமாக மோதியுள்ளது. இதனால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நோரா, “என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். என விபத்தின் அச்சத்திலிருந்து வெளிவராத நிலையில் பேசியுள்ளார். இது மிகவும் பயங்கரமான அனுபவம். 2025-ஆம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல், அதுகுறித்து நாம் சாவகாசமாக பேசிக்கொண்டிருப்பது வருத்தமாக இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். தயவுசெய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய 27 வயதான வினய் சக்பால் என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து நடந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார் நோரா ஃபதேஹி. அதன்பின் இசை நிகழ்ச்சிக்கு சென்று நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். விபத்தில் சிக்கியபோதும் ஓய்வு எடுக்காமல் ஒப்புக் கொண்டபடி இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய நோராவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
