லக திரைப்படத் துறையின் மிகவும் மதிப்புமிக்க அமைப்புகளில் ஒன்றான “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்” (Academy of Motion Picture Arts and Sciences) உறுப்பினராக பிரபல திரைப்பட எடிட்டர் ஏ. ஸ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஆஸ்கார் விருதுகளுக்கான திரைப்படங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார்.

இந்த சாதனைக்காக தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கம் (SIFEA) சார்பில் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், படத்தொகுப்புத் துறையில் ஸ்ரீகர் பிரசாத் வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால பங்களிப்புக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீகர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில், “இந்திய சினிமா சார்பில் ஆஸ்கார் விருது குழுவில் படங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். 17 மொழிகளில் பணியாற்றி 9 தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், இந்த அங்கீகாரம் எனக்கு மேலும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவராக திகழும் ஸ்ரீகர் பிரசாத், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தனது தனித்துவமான எடிட்டிங் திறமையால் முத்திரை பதித்துள்ளார். அவரது இந்த சர்வதேச அங்கீகாரம் இந்திய திரைப்படத் துறைக்கும், குறிப்பாக தென்னிந்திய படத்தொகுப்பாளர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version