2026-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி திரைப்படமான ஹோம்பவுண்ட்’ (Homebound) அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஹோம்பவுண்ட் திரைப்படம்’மசான்’ (Masaan) திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நீரஜ் கய்வான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பஷரத் பீர் என்பவர் ‘நியூயார்க் டைம்ஸில்’ எழுதிய கட்டுரையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா ஊரடங்கின்போது இதயத்தை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, பஷரத் பீர் “A Friendship, a Pandemic and a Death Beside the Highway” என்ற கட்டுரையை எழுதினார்.
2020-ஆம் ஆண்டு மே மாதம், கொரோனா ஊரடங்கின் போது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு இளைஞன், மயக்கமடைந்து உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த தனது நண்பனை மடியில் கிடத்தி, நெடுஞ்சாலை ஓரத்தில் அழுதுகொண்டிருப்பார். இதைப் பார்த்த பஷரத் பீர், அந்த இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களின் கதையை கட்டுரையாக எழுதினார்.
அந்த இரு நண்பர்கள் முகமது சையூப் மற்றும் அமிர்த் குமார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவர்கள் குஜராத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், வேலையிழந்த இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப லாரியில் ஏறினர். வழியில் அமிர்த் குமாருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், லாரியில் இருந்த மற்றவர்கள் அவரை கட்டாயப்படுத்தி கீழே இறக்கி விட்டுவிடுவார்கள்.
தனது நண்பனைத் தனியாக விட மனமில்லாத சையூப், தானும் அவரோடு நடுவழியில் இறங்கிக்கொண்டார். நெடுஞ்சாலையில் பல மணிநேரம் உதவிக்காகக் காத்திருந்து, இறுதியில் மருத்துவமனைக்கு சென்றும் சிகிச்சை பலனின்றி அமிர்த் உயிரிழந்தார். தனது நண்பனின் சடலத்தை எப்படியாவது அவனது பெற்றோரிடம் கொண்டு சேர்க்க சையூப் நடத்திய சட்டப் போராட்டங்களையும், அந்த ஆழமான நட்பையும் பஷரத் பீர் தனது கட்டுரையில் மிக உருக்கமாக எழுதியிருந்தார்.
மனதை உருக்கும் இந்த கட்டுரையின் அடிப்படையிலே ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  படத்தில் சையூப்பின் கதாபாத்திரம் ஷோயப் என்றும், அமிர்தின் கதாபாத்திரம் சந்தன் என்றும் மாற்றப்பட்டுள்ளது. ஷோயப் கதாபாத்திரத்தில் இஷான் கட்டரும், சந்தன் கதாபாத்திரத்தில் விஷால் ஜெத்வாவும் நடித்துள்ளனர்.
மதத்தையும் சாதியையும் கடந்த ஒரு புனிதமான நட்பையும், அதே சமயம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலியையும் இத்திரைப்படம் உலகிற்கு உரக்கச் சொன்னது. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இறுதிப் பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் ஹோம்பவுண்ட் இடம் பிடித்துள்ளது. இதில் மொத்தம் 15 வெளிநாட்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.
இந்த 15 படங்களில் இருந்து 5 படங்கள் மட்டுமே இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகும், இறுதிப் பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்படும். 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் நடைபெறுகிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version