நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 51-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமது கட்சி மூலம் விஜய் எடுத்திருக்கும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு, இந்தப் பிறந்தநாள் விழா முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் பெயரில் நற்பணிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் அவரது ஹிட் படங்கள் மறுவெளியீடாகி இருக்கின்றன. உலகம் முழுவதிலும் தமக்கிருக்கும் பெரும் ரசிகர்ப் படையின் நம்பிக்கையில் அரசியலில் இறங்கியிருக்கிறார் விஜய். அவரது இந்த முடிவை அலசுகிறது இந்தக் கட்டுரை.
விஜய்க்கு எப்படி இந்த மாஸ்?
இயக்குநர் எஸ்.ஏ.சியின் மகன் விஜய், நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் 1992-ம் ஆண்டிலிருந்து நடித்து வந்தபோது உருவ கேலிக்கு ஆளானார். பெரும் இயக்குநரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவதா என அடுத்தடுத்த படங்களில் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து தம்மை மேம்படுத்திக்கொண்டு, நடனத்திற்காகவும் குழந்தைத்தனம் மாறாத முகத்திற்காகவும், சாக்லேட் பாய் தோற்றத்திற்காகவும் பின்னர் புகழப்படும் நிலைக்கு வந்தார். ஆரம்பத்தில் குடும்பம், இளைஞர்களைக் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுத்தார். இயக்குநர் விக்ரமனின் பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் காதல் நாயகனாகத் தொடர்ந்து நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, பிரியமுடன், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் என நடித்துக் காதல் மூலம் இளைஞர்களைக் கவர்ந்தார்.
இதன்மூலம் நல்ல பையன் இமேஜை வைத்திருந்த விஜய்க்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை கில்லி திரைப்படம் அளித்தது. அதற்கடுத்து அழகிய தமிழ் மகன், குருவி என விளையாட்டு வீரராகவும் தோன்றி வந்தார். கில்லிக்கு அடுத்த மிகப்பெரும் வெற்றியை போக்கிரி கொடுக்க, அதன்பின் கெட்டவர்களுள் நல்லவன், நல்ல வேலைகளைச் செய்யும் கெட்டவன் எனப் பல குணாதிசயங்களைக் கொண்ட கதைகளை எடுத்து நடித்தார். அதன் பின்னான பெரும் வெற்றியையும் இப்போதிருக்கும் வெறித்தனமான ரசிகர் கூட்டத்தையும் துப்பாக்கி படம் அவருக்குத் தூக்கிக் கொடுத்தது. அதன்மூலம் மாஸ் நட்சத்திரங்களின் உச்சத்திற்கு சென்ற விஜய், கடைசியாக நடித்த கோட் வரை அந்தப் பிம்பத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை.
பன்ச் டயலாக் பயணம்
விஜய் மாஸ் ஹீரோ ஆனதும் அதற்கு அவரது பஞ்ச் டயலாக்குகளுக்கு முக்கிய பங்கு உண்டு. “வாழ்க்கை ஒரு வட்டம் டா, ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன், நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர், எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா” போன்ற விசில் தெறிக்கும் வசனங்களைப் படங்களில் தவறாமல் வைத்து வந்தார். சரியான நேரத்தில், அதாவது விஜய்யின் ரசிகர் மன்றங்கள் ஒன்றிணைந்து விஜய் மக்கள் இயக்கமாக உருவானபோது, எஸ்.ஏ.சி அவரை அரசியலுக்குள் நுழைக்க நினைத்தபோது, வெளிப்படையாக அதை மறுத்துவிட்டு, மறைமுகமாக தன் படங்களில் அரசியல் ரீதியான வசனங்களைக் கூட்டினார். அவரது ‘ஐயம் வெயிட்டிங்” அப்படிப்பட்ட ஒன்றுதான். ரஜினியைப் பின்பற்றி அரசியலுக்குள் வர சரியான நேரத்திற்குக் காத்திருக்கிறேன் என்பதற்கான குறியீடு. அதே நேரத்தில் திருப்பாச்சி படத்தில் பெண்களின் ஆடை குறித்த பஞ்ச் டயலாக்கில் பிற்போக்கு வாதத்தையும் முன் வைத்தார் விஜய். அவர் அரசியலுக்கு வந்திருக்கும் நேரத்தில் அதுவும் குறிப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.
திரை உச்சத்தைத் துறந்தாரா விஜய்
தமிழ் சினிமாவில் 65 படங்களுக்கு மேல் நடித்த விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவை முற்றிலும் உதறிவிட்டு, முழுநேர அரசியல்வாதி ஆகப்போகிறார். அவரைக் கொண்டாடும் தமிழக வெற்றிக் கழகத்தினரும், விஜய் ரசிகர்களும் கூட “சினிமாவில் பீக்கில் இருந்த விஜய், அதை உதறிவிட்டு மக்கள் சேவையில் இறங்கியிருக்கிறார்” என்று புகழாரங்களைச் சூட்டி வருகின்றனர். இந்த இடத்தில், நடிகர் விஜய்யின் அண்மைக்கால சினிமா வெற்றிகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கிறது. துப்பாக்கி படத்திற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான பிரம்மாண்ட ஹிட்டை விஜய் கொடுத்துவிடவில்லை. வசூல் ரீதியான கணக்குகளை மட்டுமே அடுத்தடுத்த படங்கள் கொடுத்துள்ளன. அதுவும் மிக சமீபத்திய படமான லியோ, வன்முறையை ஏகத்திற்குக் கட்டவிழ்ந்து விடுவதாக சர்ச்சையே எழுந்தது. அடுத்து வந்த கோட் ரூ.500 கோடி வசூலைக் கூட தர முடியாமல் சரிந்தது. இப்படி இருக்க, தமக்கிருக்கும் நட்சத்திர அந்தஸ்துக்கு சராசரி படங்களும் நடிக்க முடியாமால், அசாதாரணமாய் எப்படி நடித்தாலும் அது ஏற்கப்படாமலும் இருப்பதால்தான் இருக்கின்ற ரசிகர் படையை வாக்கு வங்கியாக விஜய் மாற்ற முயல்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
வழக்கமான எம்.ஜி.ஆர் – ரஜினி சென்டிமென்ட்
திரையிலிருந்து அரசியலுக்கு வரும் அனைவருமே எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. ஆனால் அப்படி நினைத்துக்கொண்டுதான் அனைவரும் அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் உட்பட. ஆரம்பத்திலிருந்தே அவருக்கு அரசியல் ஆசை இல்லாததுபோல் காட்டப்பட்டிருந்தாலும், ஸ்டைல் மூலம் அதிகப்படியான ரசிகர்களைச் சம்பாதித்த எம்ஜிஆரையும் ரஜினியையும் விஜய் தவறாமல் ரெபரன்ஸ் வைத்து வந்தார். “அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேண்டா, என் வாத்தியார் சூப்பர் ஸ்டார்” போன்ற பாடல்களில் வைத்தார். நடிப்பிலும் மூக்கைச் சுண்டிவிடுவது, வெட்டி வெட்டி ஓடுவது என எம்ஜிஆரின் மேனரிசத்தைக் காட்டி வந்தார். எம்ஜிஆருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்த அரசியல், ரஜினியைக் கைவிட்டது. விஜயகாந்துக்கு சோபித்த ரசிகர் பட்டாளம் கமலை கவிழ்த்தியது. சரத்குமாரைப் பின் வாங்க வைத்தது. விஜய்க்கு என்ன செய்யும் என்பதைக் காலம்தான் சொல்லும்.