பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தின் பட பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியின் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களை இந்தப் படம் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு ‘மா வந்தே’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை வீர் ரெட்டி தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் கிராந்தி குமார் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் மோடி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்த நிலையில், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக ‘மாக்ரோ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் உன்னி முகுந்தன். தமிழில் சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தில் நடித்தவர். இவர் தான் மோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதையடுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக பிரதமர் மோடியின் உடல் மொழி, அவரது தோற்றத்தை பிரதிபலிக்கும் உடைகள், அவரது பேச்சு, நடை, பாவனை என அனைத்தையும் நுட்பமாக வெளிப்படுத்தும் பயிற்சிகளில் உன்னி முகுந்தன் ஈடுபட்டுள்ளாராம்.
மோடியின் பயோபிக் படமான ‘மா வந்தே’ இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்பில், “வலிமையான பயோபிக் படமாக இந்தப் படம் உருவாகும். இந்திய மண்ணின் சாயலை பிரதிபலிக்கும் வகையிலும், தளராத விடாமுயற்சியால் தேசத்தின் தலைவிதியை உருவாக்கியவரின் படமாக இது இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
